சேமிப்பு ஏழைகளுக்கானது, முதலீடு பணக்காரர்களுக்கானது

 

பொதுவாக சேமிப்பை பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம். நமது பள்ளி பாடத்திட்டங்களில் கூட சேமிப்பின் பயனை அறிவுறுத்தி பாடங்கள் உண்டு. ஆனால் முதலீடு?

முதலீடு செய்துள்ளீர்களா?

நிலத்தில் அல்லது தங்கத்தில் முதலீடு செய்துள்ளேன் என்று சிலர் சொல்லக்கூடும். பெரும்பாலும் அவர்கள் கூறுவது சொந்த வீட்டை அல்லது தங்க ஆபரணங்களை. இவை உண்மையில் முதலீடு தானா?

முதலீடு என்றால் என்ன?

முதலீடு என்பது இலாபத்தை எதிர்பார்த்துப் பணத்தை ஏதாவதொரு பொருளாதார முயற்சியில் போடுவதைக் குறிக்கும். இது பொதுவாக நீண்ட கால அடிப்படையிலானது. பெரும்பாலும் முதலீடுகள் ரிஸ்க்குடன் சம்பந்தப்பட்டது. பங்குகள், சொத்து, நிலையான வட்டியுடனான கடனீடுகள் போன்றவை ஆகும். சேமிப்புக்கும் முதலீடு செய்வதற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் ரிஸ்க் அளவு. சேமிப்பதன் மூலம் நீங்கள் குறைந்த வருமானத்தை ஈட்டுவீர்கள், ரிஸ்க்கும் குறைவு. மாறாக, முதலீடு ரிஸ்க்குடன் அதிக வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

சேமிப்பிற்கு மூலதனம் தேவையில்லை. நீங்கள் ஒரு ரூபாயில் இருந்து கூட தொடங்கலாம். சேமிப்பு உங்கள் பணத்தை பாதுகாக்கும், ரிஸ்கும் குறைவு அதே வேலையில் அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைவு.

முதலீட்டிற்கு முக்கிய தேவை மூலதனம். மூலதனத்தை நீங்கள் சேமிப்பில் உருவாக்கலாம். முதலீடு உங்கள் மூலதனத்தை பெருக்கவும் அதே வேலையில் இழக்கவும் செய்யும். முதலீட்டில் அதிக அக்கறையும் ஆராய்ச்சியும் தேவை. போதிய ஆராய்ச்சியின்றி செய்ப்படும் முதலீடுகள் சூதாட்டத்திற்கு சமமானது.

முதலீடுகள் கடினமானவை உங்கள் நெஞ்சுரத்தை சோதித்து பார்ப்பவை. சேமிப்பு எளிமையானவை, குறைந்தபட்சம் உங்கள் அசலாவது பாதுகாக்கப்படும்.

பொதுவாக உங்கள் மூலதனத்தை பொறுத்து உங்கள் முதலீட்டு வருமானம் அமையும், நீங்கள் 10,000 ரூபாய் சேமித்து, 10% ஆண்டு வருமானம் கிடைக்கும் ஒரு திட்டத்தில் போடுகிறீர்கள். ஒரு வருடம் கழித்து அந்த தொகை 11,000 ரூபாயாக மாறியிருக்கும். ஒரு வருடத்தில் 10000 ரூபாய் வருமானம் மிக குறைவாக தோன்றலாம். இதுவே 1 கோடி முதலீடு செய்தால் ஆண்டுக்கு 10% வருமானமாக 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
ஐந்து வருடங்கள் நீங்கள் இத்தொகையை தொடர்ந்து முதலீடு செய்திருந்தால் ஐந்தாம் வருட முடிவில் 16 கோடி ரூபாய் உங்கள் கைகளில் இருக்கும். முதலீடும், கூட்டு வட்டியும் செல்வத்தை உருவாக்கும் மிக பெரும் காரணகர்த்தாக்கள்.

முதலீடு ரிஸ்க் நிறைந்தவை என்று சொல்லியிருந்தோம். ஆம் முதலீடுகள் என்றும் சீராய் வளர்வதில்லை.

ஆண்டு 1 இல் நீங்கள் 10,000 முதலீடு செய்கிறீர்கள், அதில் முதலீட்டு வருவாய் ஏதுமில்லை. 2 ஆம் ஆண்டில் நீங்கள் சேமித்த அசல் 5,000 ரூபாயாக குறைகிறது. 3 ஆம் ஆண்டில் அதே அசல் 25,000 ரூபாயாக வளர்கிறது.
இந்த ஏற்ற இறக்கங்களுக்கு நீங்கள் பழகாவிடில் உங்கள் முதலீடு வளராது. 10,000 ரூபாய் சரிவை ஏற்றுக்கொள்ளும் நம் மனம் 1 கோடி ரூபாய் சரிவை ஏற்றுக்கொள்வதில்லை.

சேமிப்பதில் அல்லது முதலீடு செய்வதில் – எதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்?

இதற்குப் பதிலளிக்க, பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள்

எது பெரியது?

உங்களின் மொத்த சொத்துக்கள் * நீங்கள் எதிர்பார்க்கும் ஆண்டு வட்டி வருமானம்
அல்லது
நீங்கள் எதிர்பார்க்கும் வருடாந்திர சேமிப்பு

மொத்த சொத்துகள் * எதிர்பார்க்கப்படும் ஆண்டு வருமானம் > எதிர்பார்க்கப்படும் சேமிப்புகள் என்றால், நீங்கள் சேமிப்பதை விட உங்கள் முதலீடுகள் உங்களுக்கு அதிகம் சம்பாதிக்கின்றன, எனவே உங்கள் முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும், உங்கள் சொத்துக்கள் ஒரு வருடத்தில் நீங்கள் சம்பாதிக்கக்கூடியதை விட அதிகமாகச் சேமிக்க முடிந்தால், சேமிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

ஏழைகளும் முதலீடு செய்து பணக்காரனாகலாம். உங்களை யாரும் தடுக்கப்போவதில்லை. ஆனால் தேவை பணக்கார மனநிலை,

உங்கள் மனநிலையே உங்களை பணக்காரனாக்கும்.

You may also like...