எட்டு வகையான செல்வம்

இந்த உலகின் மிகப் பெரிய மாயைகளில் ஒன்று செல்வம்.  இவ்வுலகில் நிறைய ஏற்ற தாழ்வு உள்ளது. ஏன் ஒருவன் ஒரு துண்டு பிரட் கூட இல்லாமல் ஆப்பிரிக்காவில் பிறந்து கஷ்டப் படுகிறான், அதே சமயம் வேறொரு இடத்தில் ஏராளமான உணவு உள்ளது, அது பெரும்பாலும் வீணாக்கப் படுகின்றது, ஏன் சில நாய்கள் வீடுகளில் வசதியுடன் வாழ்கின்றன, வேறு சில தெருக்களில் அலைந்து கொண்டிருக்கின்றன, என்பதற்கெல்லாம் தர்க்க ரீதியான காரணமோ விளக்கமோ இல்லை.

செல்வம் என்பது வெவ்வேறு விதமான உருவங்களில் உங்களுக்கு வழங்கப் பட்டிருக்கின்றது. நீங்கள் செய்ய வேண்டியது அதை உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டியது மட்டுமே. எட்டு வகையான செல்வங்கள் இருக்கின்றன.

பொருள் வசதி என்னும் செல்வம்:  முதல் வகையாக நாம் சாதாரணமாகப் புரிந்து கொள்வது பொருட் செல்வம். போர்ட் கம்பெனியின்  குடும்பத்தில் பிறந்ததால் மட்டுமே ஒருவர் எந்த முயற்சியுமின்றி ஏராளமான செல்வத்தை அடைகின்றார். ஏன் வேறொருவர்   பணம் சம்பாதிக்க வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டியதிருக்கின்றது? ஏன் சிலர் பரம்பரைச் சொத்தை அடைகின்றனர்,  சிலர் அடைவதில்லை?

உடல்நலம் என்னும் செல்வம்: பணம் மட்டுமே இருந்தால் போதாது. சிலருக்கு ஏராளமான பணம் இருக்கும் ஆனால் சரியாகச் சாப்பிட முடியாது. சர்க்கரை நோய், அதிகக் கொழுப்பு  ஆகிய பிரச்சினைகள் இருக்கும். அப்போது பணம் ஒரு பொருட்டே அல்ல. ஆனால் சிலரிடம் பணம் அதிகம் இருக்காது, ஆனால் தேவையான உணவும் உண்பதற்கு உடல்நலனும் இருக்கும். இந்தியாவில் விவசாயிகளிடம் அதிகப் பணம் கிடையாது, ஆனால் ஏராளமான உணவு இருக்கும். யார் அவர்களிடம் சென்றாலும் உணவு அளிப்பர். நகரம் முழுமைக்குமே அவர்களால் உணவளிக்க முடியும். அவர்கள் நன்றாக உறங்குவார்கள்.

வெற்றி என்னும் செல்வம்: (விஜயலட்சுமி) ஒருவர் பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருக்கலாம். ஆனால் அவர் எது செய்தாலும் தோல்வியை அடைவார். எதை எடுத்துக் கொண்டாலும் அவர்களால் வெற்றியடைய முடியாது.

தைரியம் என்னும் செல்வம்: ஒருவர்  வாழ்க்கையை வெற்றியடைந்தாலும் தோல்வி யடைந் தாலும் கவலைப் படாமல் ஒரு சவாலான விளையாட்டாகக்  காண வேண்டும். ஆனால் தவறுகளைப் பற்றிப் பயந்து கொண்டிருந்தால், அல்லது எதுவும் செய்யாமல் இருந்தால், தைரியம் என்னும் செல்வத்தை இழந்தவராவர். பணம் ஏராளமாக இருந்தாலும், இந்த தைரியம் என்னும் செல்வம் இல்லையெனில், வாழ்க்கையில் சுவாரசியம் இல்லை. சிலரிடம் பணம் அதிகமிருக்காது, ஆயினும் தைரியம் இருந்தால் அது செல்வத்தைக் குறிப்பதாகும்.

நட்பு என்னும் செல்வம்: ஐந்தாவது வகைச் செல்வம் நட்பு மற்றும் அக்கறை காட்டும்  குணம், சார்பு மனப்பாங்கு. பிற செல்வங்கள் இருந்தாலும்   சார்புணர்வு இல்லையெனில் கட்டுப்பட்ட உணர்வுதான் இருக்கும். விருந்துகளில் அதுதான் காணப்படுகின்றது. பல பணக்காரர்கள், விருந்துகளுக்குச் செல்வதே தங்கள் பணப்பெருமையைக் காட்டிக் கொள்வதற்குத் தான். இனிப்பு பூசிய துன்பத்தினைத்தான் அங்கு காண்கிறீர்கள். மிகவும் இறுக்கமாக இருக்கிறார் கள். உண்மையில் அது ஒரு போர்க்களம் போன்றுதான் இருக்கிறது. விருந்துகள் எல்லாம் போட்டிக்களம்  அல்லது போர்க்களம் போன்றுதான் உள்ளன.  ஒவ்வொருவரும் ஒரு கேடயத் தினை அணிந்து கொண்டிருக்கின்றனர்.  அது செல்வமே அல்ல.

திறன் என்னும் செல்வம் : மற்றொரு வகையான செல்வம் என்பது பல்வேறு விதமான திறன்களும் திறமைகளும் கொண்டிருப்பதாகும். சிலர் மிக நன்றாக எழுதுவர், சிலர் நன்கு விவாதிப்பர், சிலர் பேச்சுத் திறன் உள்ளவராயிருப்பர், சிலர் இசைத் திறனுள்ளவராயிருப்பர், சிலருக்கு மிக இனிமையான குரல் வளம் இருக்கும், சிலர் நன்கு சமையல் செய்வர், சிலர் குழந்தை வளர்ப்பில் சிறந்து விளங்குவர், சிலர் ஆட்சித் திறன் பெற்றிருப்பர், சிலர் முற்றிலும் மாறுபட்ட திறன்கள் கொண்டிருப்பர். இவர்கள் தங்கள் முழுத் திறனையும் பயன்படுத்தி எதையோ அடைய எண்ணுகின்றனர். ஆயினும் தோல்வியடைந்து விடுவர். முயற்சி மட்டுமே ஒருவரது இலக்கினை அடைய போதுமானது இல்லை.

கண்ணியம் என்னும் செல்வம் :  இந்த உலகம் முழுவதிலும் படிக்க வேண்டிய பாடங்கள் நிறைந்துள்ளன என்பதை முழு விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே அறிய முடியும். ஒரு புல்லைப் போன்று அடக்கத்துடன் இருங்கள். அப்போது எதுவும் உங்களைப் பாதிக்காது. யாரும் உங்களை இழிவு படுத்த முடியாது. தெய்வத்தின் பார்வையில் படைப்பினுக்கு உழைப்பவர்கள் அரசர்கள் அரசிகளே ஆவர். அரசனைப் போன்று நடங்கள், பூரணமான பணியாளராக இருங்கள் !

மூலாதார நினைவு என்னும் செல்வம்: நாம் பிறந்திருக்கிறோம் என்பது மட்டும்தான் நமக்குத் தெரியும்.எப்படிப் பிறந்தோம் என்பது கூட நமக்குத் தெரியாது. நான்கு ஐந்து வயதிற்குப் பிறகுதான் நம்மைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ளத் துவங்குகிறோம். நமது நினைவுத் திறன் மிகக் குறைவானது. இது மட்டுமே நம் வாழ்க்கை என்று தோன்றுகிறது. நமது மூலத்தினை நாம் அறிவதில்லை. நமது மூலத்தினை நமது எல்லையற்ற  கடந்த காலத்தினை அறியும் கணத்திலேயே நமது வாழ்க்கை முழுவதுமே மாறுகின்றது. எத்துணை செல்வந்தர்  என்று உணர்ந்தறிய முடிகிறது. உடனேயே நீங்கள் நடக்கும் விதம் மாறுகின்றது. இதுவே மூலாதாரத்தினைப் பற்றிய விழிப்புணர்வு.

Source: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அருளுரை

You may also like...