40 வயதில் ஓய்வு பெறுவது எப்படி?

retire early

நம்மில் பெரும்பாலோர் இளமையில், ​​​​ஓய்வை பற்றி கவலை கொள்வதில்லை. இந்தியாவில் ஓய்வு பெறும் வயது என்பது 60 முதல் 65 ஆண்டுகள். எனவே, நீங்கள் உங்களுக்கு பிடித்தோ பிடிக்காமலோ வாழ்நாள் முழுவதும் ஒரு வேலை செய்வீர்கள், பின்னர் ஒரு நாள் உங்கள் அலுவலகம் உங்களுக்கு ஓய்வு வழங்கும்.
நீங்கள் ஒருவேளை சேமித்திருந்தால், அந்த பணத்தில் உங்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்வீர்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் அசைபோடும்போது நீங்கள் நிறைய விஷயங்களை இழந்திருப்பதை உணர்விர்கள். உங்கள் சின்ன சின்ன ஆசைகள், நீங்கள் படிக்க விரும்பிய புத்தகங்கள், நீங்கள் வரைய விரும்பிய ஓவியங்கள், நீங்கள் செல்ல விரும்பிய விடுமுறைகள் இன்னும் நிறைய. உங்கள் ஓய்வு நாட்கள் ஆசைகளை நிறைவேற்ற போதாமல் போகலாம்.

ஒருவேளை முன்கூட்டியே ஓய்வு பெற்று இருந்தால்.

முன்கூட்டியே ஓய்வு பெற, முதலில் ஓய்வை பற்றிய உங்கள் புரிதலை மாற்ற வேண்டும். ஓய்வு பெறுவது என்பதன் பொருள் உங்கள் வாழ்க்கையின் முடிவு அல்ல அது உங்கள் வாழ்க்கையின் ஆரம்பம். நீங்கள் 60 வயதாகும் வரை ஓய்வு பெற காத்திருக்க வேண்டாம்; நீங்கள் விரும்பும் போது ஓய்வு பெறுங்கள். நீங்கள் 40 வயதில் ஓய்வு பெற விரும்பினால், உங்களுக்குள் எது தேவை என்று சிந்தியுங்கள். உங்களுக்கு தேவை வலுவானோதொரு நிதி ஆதாரம். அதை அடைவதே உங்கள் இலக்காக இருக்க வேண்டும்.

நிதி சுதந்திரம் என்றால் என்ன?

எந்தக் கடன்களும் இல்லாத வாழ்க்கையின் ஒரு கட்டம், சௌகரிகமான வாழ்க்கையை நடத்த போதுமான சேமிப்பு. யாருக்காகவும் வேலை செய்யாத நிலை – இதுவே நிதி சுதந்திரம். நீங்கள் விரும்பும் அல்லது உங்களுக்கான வேலையை செய்ய நிதி சுதந்திரம் அனுமதிக்கிறது. அந்த இலக்கை அடைவதற்கான ஒரு பிரபலமான வழிமுறை FIRE எனப்படுகிறது.

FIRE என்றால் என்ன?

FIRE வழிமுறை எளிமையானது; நீங்கள் தீவிர சேமிப்பில் கவனம் செலுத்தி, முதலீடுகளுடன் கணிசமான நிதியை உருவாக்கினால் நீங்கள் சீக்கிரம் ஓய்வு பெறலாம். உங்கள் கடன்கள் அனைத்தையும் அடைத்துவிட்டு, ஓய்வுபெறும் முன் Passive வருமானத்தை உருவாக்குவதே குறிக்கோள். எனவே, நாளை சுகமான வாழ்க்கையை அனுபவிக்க இன்றே சிக்கனமாக வாழ பழக வேண்டும்.

இப்போது, உங்களுக்கு தோன்றலாம், “சீக்கிர ஓய்வுக்கு உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்று?” இதனை கணக்கிட 4% விதி பயன்படுகிறது. உங்கள் ஓய்வூதிய நிதியானது உங்களின் வருடாந்திர செலவுகளை விட 25 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் அந்த நிதியிலிருந்து 4% வரை நீங்கள் செலவு செய்யலாம். நீங்கள் ஓய்வு பெறும்போது உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்ற தோராய தொகையை இதனை கொண்டு கண்டுபிடிக்கலாம்.

FIRE கோட்பாடுகள்
  • ஓய்வூதியத்திற்கான நிதித் திட்டத்தை முன்கூட்டியே தொடங்குங்கள். உங்கள் இலக்கு தெளிவாக இருந்தால், அதை அடைவது எளிது.
  • உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். நீங்கள் எவ்வளவு குறைவாக செலவு செய்கிறீர்களோ அவ்வளவு சேமிப்பு உங்களிடம் அதிகமாக இருக்கும்.
  • கூடுதல் வருமான ஆதாரங்களைக் கண்டறியவும். பகுதி நேர வேலைகள் அதிகம் சேமிக்க உதவும்.
  • சேமிப்பதையும் முதலீடு செய்வதையும் ஒரு வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை முதலீட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துங்கள்.
FIRE ஏன் அனைவருக்கும் பொருந்தாது?

ஓய்வூதிய திட்டமிடல் அனைவருக்கும் பொதுவானது, ஆனால் ஒரே முறை அனைவருக்கும் சமமாக வேலை செய்யாது . FIRE கோட்பாட்டின் குறைபாடுகளில் ஒன்று, உங்கள் மாத வருமானம் பெரிதாக இருக்க வேண்டும். 40 வயதிற்குள் கணிசமான செல்வத்தை உருவாக்க உங்களுக்கு பணம் அவசியம். சொல்லப்போனால் பணம் குட்டி போடவேண்டும். அதற்கு சிறிய தொகை போதாது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் 4% தொகையை நீங்கள் செலவழித்தால் உங்கள் முதலீட்டு தொகை வெகுவாக குறைய கூடும்.

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வது அல்லது விலையுயர்ந்த பொருட்களை வாங்குவது போன்ற உங்கள் கனவுகளில் சிலவற்றை நீங்கள் இழக்க நேரிடலாம். எனவே, FIRE அனைவருக்கும் பொருந்தாது.

இந்தியா சூழலுக்கு ஏற்ற FIRE

நீங்கள் இந்தியாவில் FIRE அடிப்படையில் ஒரு முன்கூட்டிய ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்க விரும்பினால், உங்களின் வருடாந்திர செலவினங்களை விட 25 மடங்கு மதிப்புள்ள ஓய்வூதிய நிதி போதுமானதாக இருக்காது. உங்களுக்கு சரியாக எவ்வளவு பணம் தேவைப்படும்? அதை ஒரு உதாரணத்துடன் கணக்கிடுவோம்.

உங்களின் தற்போதைய வயது 25 ஆண்டுகள், உங்கள் மாத வாழ்க்கைச் செலவு ₹25,000 என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் 40 வயதிற்குள் ஓய்வு பெற விரும்பினால், ஓய்வூதிய நிதியைக் குவிக்க உங்களிடம் 15 ஆண்டுகள் உள்ளன. பணவீக்க விகிதம் 6% ஆக இருந்தால், நீங்கள் 40 வயதை அடையும் போது உங்கள் மாதச் செலவுகள் ₹25,000 ரூபாயிலிருந்து ₹60,000 மாக உயர்ந்திருக்கும் . அதாவது உங்கள் வாழ்க்கை முறையைப் பராமரிக்க ஆண்டுக்கு சுமார் ₹7.20 லட்சம் தேவைப்படும்.

இந்தக் கணக்கீட்டின்படி, நிதிச் சுதந்திரத்தைப் பெற, 40 வயதிற்குள் ₹2.16 கோடிக்கு மேல் சேமித்து நீங்கள் வைத்திருக்க வேண்டும். இன்றே லாபகரமான முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்காத வரையில் உங்கள் சேமிப்பை மட்டும் வைத்து அந்த இலக்கை அடைவது கடினமே. 15 ஆண்டுகளில் ₹2.16 கோடியைக் குவிக்க, ஆண்டுக்கு 10% கூட்டு வட்டி வழங்கும் ஒரு திட்டத்தில் நீங்கள் ஆண்டுக்கு ₹6.30 லட்சங்களைச் முதலீடு செய்ய வேண்டும். இதற்கு மாதா மாதம் ₹50000 ஒதுக்க வேண்டும்.

உங்கள் 25 வயதில் மாதம் 50,000 ரூபாய் சேமிப்பது கடினமாக தோன்றலாம். அதற்கு பதில் மாதம் 25,000 ரூபாயில் தொடங்குங்கள், ஒவ்வொரு வருடமும் உங்கள் முதலீட்டை மாதம் 5000 ரூபாய் அதிகரிப்பதன் மூலம் அதே இலக்கை அடையலாம்.

முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு தேவையான காரணிகள்

ஓய்வூதியத்திற்கான நிதித் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன், கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணிகளைக் கருத்தில் கொள்ளுங்கள்

  • ஓய்வு வாழ்க்கை உங்களுக்கு எப்படி வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும். நீங்கள் வேலையை முற்றிலுமாக நிறுத்த வேண்டுமா அல்லது நீங்கள் விரும்பும் ஒன்றைச் செய்ய வேண்டுமா என்பதை தீர்மானியுங்கள்.
  • உங்கள் வருடாந்திர செலவுகளை நீங்கள் மதிப்பிட வேண்டும். ஒவ்வொரு செலவுகளையும் குறித்து வையுங்கள். நீங்கள் காகிதத்தில் ஒரு துல்லியமான தொகையை பெற்றவுடன், உங்கள் ஓய்வூதியத்தைத் திட்டமிடுவது எளிதான செயலாக இருக்கும்.
  • மிக அதிக சேமிப்பு மற்றும் முதலீடுகள் மட்டுமே ஒரு பெரிய ஓய்வூதிய தொகையை உருவாக்குவதற்கான ஒரே வழி. எனவே, நீங்கள் உங்கள் மாதாந்திர செலவினங்களைக் கணிசமாகக் குறைத்து, எளிமையான வாழ்க்கையை வாழ பழகுங்கள்.
  • Passive Income இல்லாமல் நீங்கள் ஓய்வுபெறும் அளவுக்குச் சேமிப்பது கடினம். எனவே, பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் EPF போன்ற உயர் மற்றும் நிலையான வருமானத்தை வழங்கக்கூடிய நிதி தயாரிப்புகளில் நீங்கள் முதலீடு செய்யலாம்.
  • 40 வயதை அடைவதற்குள் உங்கள் கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஓய்வுக்குப் பிறகு உங்களால் கடன்களை அடைப்பது கடினம்.

நீங்கள் முன்கூட்டியே முதலீடு செய்யத் தொடங்கினால் நிதி சுதந்திரத்தை அடைவது எளிது. சரியான திட்டமிடல் மற்றும் Diversified முதலீடுகளுடன் நீங்கள் கணிசமான ஓய்வூதிய நிதியை உருவாக்கலாம். அதேவேளையில் சுற்றுலா செல்ல அல்லது புதிய போன் வாங்க நினைத்தால் அதனை மறுக்காதீர்கள். உங்கள் ஆசைகளால் ஓய்வு வயது ஒரு வருடம் தள்ளி போகலாம். 41 வயதில் ஓய்வு பெறுவது ஒன்றும் தவறில்லை.

நினைவில் கொள்ளுங்கள், நாம் வாழ்வது ஒருமுறை மட்டுமே

You may also like...