கடன் கொடியது

 

கடன் கொடியது – கடன் பல உயிர்களை பலி கொண்டுள்ளது. இருந்தும் “கடனின்றி அமையாது இவ்வுலகு”. தன் வாழ்நாளில் கடனே வாங்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

கைமாத்தாக நீங்கள் பெற்ற சில நூறு ரூபாய்கள் கூட ஒருவகையில் கடன் தான்.

நீங்கள் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்வதில் இருந்து கடன் – உங்களை தடுத்து நிறுத்துகிறது.

கடனால் இயங்கும் உலகம்

“என்னால் அதை வாங்க முடியாது, ஆனால் எனக்கு இப்போதே அது வேண்டும், எனவே நான் எனது கிரெடிட் கார்டில் பணம் செலுத்துகிறேன்” என்ற கடனால் உந்தப்பட்ட சமூகத்தில் நாம் வாழ்கிறோம்.

நீங்கள் சீக்கிரமாக வளருங்கள், கல்லூரிக்குச் செல்லுங்கள், பட்டம் பெற்று வேலையில் சேருங்கள், திருமணம் செய்து கொள்ளுங்கள், வீடு வாங்குங்கள், வீட்டை நிரப்புவதற்குப் பொருட்களை வாங்குங்கள், குழந்தைகளைப் பெற்று, மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று உங்கள் வாழ்க்கை இந்த சமூகத்தால் வரையறுக்கப்படுகிறது. இதில் ஏதேனும் ஒரு நிலையில் நீங்கள் தேங்கி நின்றால், நீங்கள் தோல்வியடைந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள். இந்த நிலைகளை தாண்ட கடன் உங்களுக்கு உதவுகிறது. ஆரம்பத்தில் ஆபத்பாந்தவனாய் தோன்றும் கடன் மெல்ல உங்கள் கழுத்தை இறுக்கி பிடிக்கும் அரக்கனாகிறது.

கடன் உங்களுக்கு பணத்துடன் மேலும் சில மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளையும் உங்களுக்கு வழங்குகிறது-

சுதந்திர இழப்பு

கடன் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் தோள்களில் ஒரு சுமை மட்டுமல்ல, உங்கள் கனவுகளை நீங்கள் துரத்துவதற்கு தடை விதிக்கும.

கடன்காரன் தட்டினால், நீங்கள் பதில் சொல்ல வேண்டும். உங்களுக்காக நீங்கள் உழைக்க வேண்டியது போக கடன்காரனுக்காக உழைக்க வேண்டிய நிலை வரும். கடன் உங்களுக்கு பிடிக்காத வேலையை செய்ய நிர்பந்திக்கும்.

கடன் நம்மை அடிமைப்படுத்தும். இந்த மாதம் என்னிடம் பணம் இல்லை அடுத்த மாதம் வாங்கிக்கொள் என்று கடன்காரனிடம் சொல்லமுடியாது. நீங்கள் உங்கள் தேவைகளை, ஆசைகளை சுருக்கி கொண்டு கடனை செலுத்த வேண்டிவரும்.

எதிர்கால சம்பளம்

கடன் – உங்கள் எதிர்காலத்திலிருந்து வாங்கப்படுகிறது என்று பொருளாதாரம் சொல்கிறது.

உங்கள் மாதாந்திர கடன், உங்கள் மாதாந்திர வருமானத்திற்கு சமமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் விரும்பும் எதையும் செய்ய ஒவ்வொரு மாதமும் உங்களிடம் பணம் இருக்காது. உங்கள் கடன்கள் அடையும் வரை உங்களின் நிலை பரிதாபமே.

நிச்சயமற்ற உலகில் எதிர்காலத்தை நம்பி கடன் வாங்குவது எவ்வளவு அபத்தம். இதே வேலை, இதே சம்பளம் இன்னும் இத்தனை வருடங்கள் வாங்குவோம் என்ற நம்பிக்கையில் கடன் வாங்குகிறீர்கள். ஆனால் எதிர்பாரா சூழ்நிலையில் உங்கள் வேலையோ, சம்பளமோ தடைபடும் பட்சத்தில் உங்களின் நிலை என்ன?

கூட்டு வட்டி இரண்டு வழிகளிலும் வேலை செய்கிறது

எட்டாவது உலக அதிசயம் எனப்படும் கூட்டு வட்டியை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிறுக சிறுக பணத்தை முதலீடு செய்வதன் மூலம், உங்கள் முதலீடும் வட்டியும் சேர்ந்து நாளடைவில் மிக பெரிய செல்வத்தை கட்டியெழுப்பலாம் என்ற அடிப்படைக் கருத்தை கூட்டு வட்டி வலியுறுத்துகிறது.

இதில் ரகசியம் என்னவென்றால் கூட்டு வட்டி இரண்டு வழிகளிலும் வேலை செய்கிறது ! உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்த மட்டுமின்றி உங்கள் நிதி நிலைமையை மோசமடையவும் செய்யும்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு வீட்டிற்குச் செலுத்துவதற்கு வங்கியில் இருந்து கடன் வாங்கி, ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சத் தொகையை மட்டும் செலுத்தும்போது. ​​உங்கள் எதிர்காலச் செல்வத்தை உங்களிடமிருந்து பறிக்கிறீர்கள். வங்கிக்காக உழைக்க தொடங்குகிறீர்கள்.

நீங்கள் 50 லட்ச ரூபாய் வீட்டை 7% வட்டி விகிதத்துடன் வாங்கினால், 20 வருட அடமானத்திற்கு பிறகு மொத்தமாக 93 லட்ச ரூபாய்க்கு மேல் செலுத்தியிருப்பீர்கள், இதில் வட்டி மட்டுமே 43 லட்சம்.

நீங்கள் கேட்கலாம் 20 வருட முடிவில் வீட்டின் மதிப்பு உயர்ந்திருக்குமே என்று – ஆனால் இந்த கேள்வியின் விடை வாடகை வீடு நல்லதா சொந்த வீடு நல்லதா என்பதன் பதிலில் அடங்கும்.

You may also like...