கடன் வாங்கி கல்யாணம் செய்த கடவுள்

திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் முதன்முறையாக கடந்த 2016-ம் ஆண்டு பக்தர்களின் காணிக்கை வருமானம் மட்டும் ரூ.1000 கோடியைத் தாண்டியது. திருப்பதி இந்தியாவின் பணக்கார கோவில், வெங்கடேஷ்வரரின் உறைவிடம். வேறு எந்த கோவிலிலும் இல்லாத அளவுக்கு ஏன் இங்கு அதிக காணிக்கை செலுத்துகிறோம்?.

வைகுண்டத்தில் விஷ்ணுவிடம் இருந்து தொடங்குகிறது இந்த புராண கதை, விஷ்ணு தனது மனைவி லட்சுமி தேவியுடன் பாற்கடலில் ஓய்வெடுக்கிறார். அப்போது பிருகு முனிவர் வருகிறார். விஷ்ணு அவரை கவனிக்கவில்லை இதனால் கோபம் கொண்ட பிருகு முனிவர் விஷ்ணுவின் மார்பில் உதைக்கிறார்.
விஷ்னு தன் தவறுக்கு மன்னிப்பு கோருகிறார். இதனை தவறாக புரிந்து கொண்ட லட்சுமி கோபம் கொண்டு தனது கணவனைத் பிரிந்து மேலோகத்தை விட்டு பூமிக்கு வந்தாள்.

விரக்தியடைந்த விஷ்ணு பகவான் அவளைப் பின்தொடர்ந்து பூமிக்கு வந்தார், அவள் அமைதியடையும் வரை அங்கேயே இருக்க முடிவு செய்தார்.
விஷ்ணு ஸ்ரீநிவாஸாகவும், லட்சுமி பத்மாவதியாகவும் மறு அவதாரம் எடுத்தனர்.

ஸ்ரீநிவாஸ், பத்மாவதியை திருமணம் செய்து கொள்ள விரும்பியபோது, ​​அவரது தந்தை ஸ்ரீனிவாஸ் ஏழை என்று மறுத்துவிட்டார், மேலும் நிறைய வரதட்சணை கொடுத்தால் மட்டுமே இந்த திருமணம் என்ற நிபந்தனையின் பேரில், திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கிறார்.
ஸ்ரீநிவாஸ், வேறு வழியின்றி செல்வத்தின் கடவுளான குபேரனிடம் மிகப் பெரிய கடன் வாங்குகிறார். குபேரன் கடனாக தங்க மலைகள் தருகிறார்.

ஸ்ரீநிவாஸ் குபேரனிடம் கலியுகத்தின் முடிவில் தனது கடனை திருப்பி செலுத்துவதாக வாக்குறுதி அளித்தார். கடனின் காலம் 43,20,000 ஆண்டுகள் அல்லது ஒரு யுகம். வெங்கடேஸ்வரா கடனாகப் பெற்ற தொகை 14 லட்சம் ராமமுத்ரா நாணயங்கள். கடன் உடன்படிக்கையின்படி, இந்த யுகம் முடியும் வரை வெங்கடேஸ்வர பகவான் தனது பக்தர்களின் உதவியுடன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இதில் அசல் அடையாது, வட்டி மட்டுமே கழியும்.

கடவுளாக இருந்தாலும் கடன் வாங்கினால் கஷ்டம் தான்.

பக்தர்களின் தாராள மனப்பான்மைக்கு ஈடாக பகவான் தனது ஆசீர்வாதங்களை வழங்குகிறார். இது ஒருவகையில் பக்தியின் வெளிப்பாடாக பார்க்கப்பட்டாலும், உண்மையில் செல்வத்தின் மீதான பற்றுதலிலிருந்து விடுபட்டு கடவுளை சரணாகதி அடைய உதவுகிறது.

திருப்பதி கோயிலுக்கு தினம்தோறும் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிரம்மோத்ஸவம் போன்ற விசேஷ சமயங்களில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்தை தொடும். இருந்தும் கடவுளால் தன் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

கடவுளுக்கு கடனை பங்கிட்டு கொள்ள நிறைய பக்தர்கள் உள்ளனர். நமக்கோ, நாம் மட்டும் தான். முடிந்தவரை கடனை தவிருங்கள்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் கடன் வாங்கும் போது, உங்கள் எதிர்காலத்தை நீங்கள் கொள்ளையடிக்கிறீர்கள். – Nathan W. Morris

You may also like...