ஆன்லைன் ரம்மி பாதுகாப்பானதா?

இன்றைய ஒரு செய்தி மிகவும் மனம் வருந்தச்செய்ததது. ஒரு அழகான குடும்பம் ஆன்லைன் ரம்மியால் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது.

தினமும் இது போல் ஆயிரம் செய்திகளை கடந்து செல்கிறோம். ஏனோ இதனை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.

அழகான குடும்பம், போதுமான வசதி இருந்தும் ஏன் இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளின் பின் சென்று ஏன் அனைத்தையும் இழக்கின்றனரோ.

இந்தியாவில் பல தற்கொலைகளுக்கு காரணம் இந்த ஆன்லைன் ரம்மி. கணிசமான அளவு பணத்தை இழக்கும் சிலர் மீள வழி தெரியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தனக்கு நிஜத்தில் கொடுக்கப்பட்ட அழகான வாழ்க்கையை ஒரு விளையாட்டிற்காக அழித்து கொள்கிறார்கள்.

ஆன்லைனில் ரம்மி விளையாடுவதை நியாயப்படுத்த மக்கள் முன்வைக்கும் காரணங்களையும் அதன் பின்னணியில் உள்ள உண்மையையும் காணலாம்.

காரணம் 1: நான் புத்திசாலி.

ஆரம்பத்தில் இது ஒரு அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டாகத் தெரிவதில்லை. மேலும் உங்கள் புத்திசாலித்தனம், பணம் சம்பாதிக்க உதவும் என்று நீங்கள் நம்ப வைக்கப்படுவீர்கள். ஆரம்பத்தில் நீங்கள் வெற்றிபெறுவது போல் வடிவமைக்க பட்டிருக்கும் இந்த விளையாட்டு போக போக கடினமடையும். நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் தோல்வி அடைவதற்கேன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த விளையாட்டு. உங்களுடன் நிஜமான மனிதர்கள் விளையாடுவது போல் தோன்றலாம். ஆனால் உண்மையில் விளையாடுவது Bots எனப்படும் கம்ப்யூட்டர் ஆக இருக்கும். கம்ப்யூட்டர் உடன் விளையாடி ஜெய்க்கும் அளவுக்கு நீங்கள் புத்திசாலியா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் மோசமாகத் தோல்வியடைந்து பாடம் கற்கும் நேரத்தில், நீங்கள் நிறைய பணத்தை இழந்து, மீள முடியா நிலையில் தள்ளப்பட்டிருப்பிகள்.

காரணம் 2: நான் கட்டுப்பாடானவன்

உங்களுடன் விளையாடுவது உங்கள் மனம். பொதுவாக ஆன்லைன் ரம்மி கேம்கள் AI மற்றும் ப்ராக்ஸி பிளேயர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக இவ்வகை விளையாட்டுக்கள் மூன்று விளைவுகளைக் கொண்டிருக்கும். முதலாவதாக, வெற்றி சாத்தியம் என்று உங்களை நம்ப வைக்க ஒரு சிறிய வெற்றி. இரண்டாவதாக, நீங்கள் பெரும்பாலும் ஒரு பெரிய வெற்றியை மயிரிழையில் இழக்கிறீர்கள். இந்த “கிட்டத்தட்ட வெற்றி”, உங்கள் மூளை மீண்டும் முயற்சி செய்ய விரும்பும் போதையை தரும். பெரும்பாலான சூதாட்ட இயந்திரங்கள் இந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவதாக, சில கேம்களில் நீங்கள் உடனடியாக தோல்வியடையக்கூடும், இது கணினி நியாயமானதாக இருப்பதை போன்ற உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தும்.
உண்மை என்னவெனில் உங்களுக்காக ஒரு பெரிய வலை வீசப்பட்டு இருக்கிறது. நீங்கள் விழும் வரை அந்த வலை தொடர்ந்து வீசப்படும்

காரணம் 3: பிரபலங்கள் ஆதரிக்கிறார்கள்.

திரையில் தோன்றும் பிரபலங்கள் நிஜத்திலும் அவ்வாரே இருப்பார்கள் என்று நம்புகிறோம். அவர்கள் என்ன கூறினாலும் நமது நல்லதுக்காக தான் என்று எடுத்துக்கொள்கிறோம்.
சில கிரிக்கெட் வீரர்கள் இந்த விளையாட்டுகளை பரிந்துரைத்தபோது. எனக்கும் ஏற்று கொள்வது கடினமாக தான் இருந்தது. நான் அவர்கள் மேல் கட்டமைத்து வைத்த பிம்பம் பொய்யான பொது, அவர்களும் நம்மை போன்ற அல்லது நம்மை விட மிக சாதாரண மனிதர்கள் தான் என தோன்றியது.
உண்மையில் பிரபலங்கள் பணத்திற்காக விளம்பரம் செய்கிறார்கள். அவர்கள் அந்த பொருளை அல்லது சேவையை உபயோகித்து நேர்மையாக உறுதியளிக்கிறார்கள் என்று அர்த்தமல்ல, விளம்பரத்தில் நடிக்க சம்பளம் வாங்குகிறார்கள். அத்துடன் அவர்கள் வேலை முடிந்தது.
பணத்தை இழக்கும்போது, ​​பாதிக்கப்படப் போவது நீங்கள் தான், பிரபலங்கள் அல்ல, அவர்கள் அங்கீகரிக்கும் பெரும்பாலான தயாரிப்புகளின் விவரங்கள் கூட அவர்களுக்குத் தெரியாது.

காரணம் 4: இது சட்டப்பூர்வமானது

சட்டப்படியான அனைத்தும் உங்களுக்கு நல்லதல்ல. மது சட்டப்பூர்வமானது, அது உங்களுக்கு நல்லதா? அதேபோல், அரசாங்கமும் சட்ட அமைப்பும் மக்களின் நலனுக்காக ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் இயங்குகின்றன. ஆன்லைன் ரம்மி கேம்கள் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படும் காரணம், இது ‘கேம் ஆஃப் ஸ்கில்’ (Game of Skill) என்ற பிரிவின் கீழ் வருகிறது. ‘கேம் ஆஃப் ஸ்கில்’ என்பது அறிவை சார்ந்து விளையாடுவது. ‘கேம் ஆஃப் சான்ஸ்’ (Game of Chance) என்பது அதிர்ஷ்டத்தை சார்ந்து விளையாடுவது. உதாரணம்: லாட்டரியை வெல்வது – இதற்கு உங்கள் அறிவு தேவையில்லை.
உண்மையில் ஆன்லைன் ரம்மி ‘கேம் ஆஃப் ஸ்கில்’ வகையை சார்ந்தது தானா?. ஆன்லைன் ரம்மி Random Number Generators என்ற வழிமுறையின் (algorithm) கீழ் இயங்குகிறது.

Random Number Generators இரு வகைப்படும்

  1. True Random Number Generators
  2. Pseudo Random Number Generators.

ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் உண்மை ரேண்டம் நம்பர் ஜெனரேட்டர் பயன்படுத்த வேண்டும். உண்மை ரேண்டம் நம்பர் ஜெனரேட்டர் (True Random Number Generators) கொண்டு விளையாட்டுகளை உருவாக்குவதற்கான பொருட்செலவு அதிகம். சாதாரண பயனாளர்களால் True Random Number Generators தன பயன்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது கடினம்.

ஆன்லைன் ரம்மி பெடரேஷன் என்ற அமைப்பு இதனை நடைமுறைப்படுத்துகிறது. ஆனால் அவற்றில் முன்னணி ரம்மி விளையாட்டு நிறுவனங்கள்தான் முக்கிய பொறுப்பில் இருக்கின்றன.

சில மாநிலங்கள் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றும் அக்கறையுடன் இதனை தடை செய்துள்ளன. ஆனால் சட்டம் இதனை அனுமதிக்கிறது.

உண்மை நிலவரம் என்ன?

ஆன்லைன் ரம்மி மூலம் யாராவது பணம் சம்பாதிக்கிறார்களா? வெகு சிலரை நீங்கள் காணலாம். எங்கோ ஒருவர் லாட்டரியை வெல்வது போன்றது தான், லட்சத்தில் ஒருவர் வெல்லக்கூடும். ஆனால் தோற்றது 99,999 பேர் என்பதை நினைவில் கொள்ளுங்கள், பங்கு சந்தையை சூதாட்டம் என்று சொல்பவர்கள் ஆன்லைன் ரம்மியில் லட்சங்களை இழக்கின்றனர்.

நீங்கள் பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறீர்கள். உங்கள் பணத்தை கொத்தி தின்ன நிறைய கழுகுகள் வட்டமடிகின்றன. தெரியாத எண்ணில் இருந்து வரும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் உங்கள் பணத்திற்க்காக வட்டமிடும் கழுகுகள் என்று உணருங்கள்.
இங்கு குறிவைக்கப்படுவது பேராசைக்காரர்கள் அல்லது அப்பாவிகளின் பணம் தான்.
முன்பை போல் கொள்ளையர்கள் கஷ்டப்ப்பட்டு வங்கியை கொள்ளையடிப்பதில்லை. உங்கள் அலைபேசியில் ஒரு சிறிய App அவர்களுக்கு போதும்.

You may also like...