சதுரங்க வேட்டை – பொன்சி திட்டங்கள்

சார்லஸ் பொன்சி – இத்தாலி நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறி சுமார் 40,000 பேரை 1.50,00,000 டாலர்கள் அளவிற்கு ஏமாற்றிய மோசடி மன்னனின் பெயர்.

இவனை போன்று மக்களை ஏமாற்றிய திட்டங்கள் அனைத்தும் பின்நாட்களில் பொன்சி திட்டங்கள் என்று அவன் பெயரில் அழைக்கப்பட்டன.

இவ்வகை திட்டங்கள் புதிய முதலீட்டாளர்களின் பணத்தை முந்தைய முதலீட்டாளர்களுக்குச் கொடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. பொன்சி திட்டங்கள் போலியான மற்றும் இல்லாத முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதாகும். இதில் முதலீட்டாளர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதலீடு செய்து ஏமாறுகிறார்கள்.

எங்கு தொடங்கியது?

1919 இல் சார்லஸ் பொன்சி என்பவரிடமிருந்து இத்திட்டம் உருவானது. அந்த நேரத்தில், அஞ்சல் சேவையானது, சர்வதேச பதில் கூப்பன்களை உள்ளடக்கியது. இந்த பதில் கூப்பன்கள் வேறொரு நாட்டில் உள்ள நபர் நமக்கு பதில் அனுப்ப உதவும். ஆகையால் அனுப்புநர் பதில் கூப்பன்களை வேறொரு நாட்டில் உள்ள நபருக்கு கடிதத்தில் அனுப்புவார், பெறுநர் அந்த கூப்பனை உள்ளூர் தபால் நிலையதில் ஏர்மெயில் தபால்தலைகளுக்கு மாற்றுவார்.

ஏர்மெயில் தபால்தலைகளின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் இருப்பதால், ஒரு நாட்டில் தபால் தலைகள் விலை உயர்ந்ததாக இருந்ததென்றால் மற்றொரு நாட்டில் குறைவாக இருக்கும். இந்த விலை வித்தியாசத்தை பயன்படுத்தி பொன்சி நிறைய லாபம் சம்பாதித்தார். அவற்றை வாங்கி அனுப்பவும் முகவர்களை அமர்த்தினார்.

இந்த வகையான பரிமாற்றம் ஒரு சட்டவிரோத நடைமுறையாக அப்போது இல்லை. பொன்சி பேராசையுடன் தனது முயற்சிகளை விரிவுபடுத்தினார். அவரது நிறுவனமான செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் 45 நாட்களில் 50% அல்லது 90 நாட்களில் 100% வருமானம் தருவதாக உறுதியளித்தது.
தபால்தலை திட்டத்தில் அவர் பெற்ற வெற்றியால், முதலீட்டாளர்கள் வெகுவாக ஈர்க்கப்பட்டனர். உண்மையில் பணத்தை முதலீடு செய்யாமல் பழைய முதலீடர்களிடம் பணத்தை பெற்று புதிய முதலீட்டாளர்களுக்கு அளித்தார். இந்தத் திட்டம் ஓராண்டு வரை நீடித்தது.

எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?

ஒரு முதலீட்டாளரிடம் இருந்து 50,000 ரூபாய் திரட்டுகிறீர்கள். அந்த பணத்தில் ஒரு தொழிலை தொடங்குகிறீர்கள். உங்கள் தொழில் லாபத்தில் இயங்கும் பட்சத்தில் முதலீட்டாளருடன் உங்கள் லாபத்தை பங்கிட்டு கொள்வீர்கள்.

ஆனால் போன்சி திட்டத்தில் – நீங்கள் எந்த தொழிலையும் ஆரம்பிக்க போவதில்லை. லாபம் வருவதாக மட்டும் முதலீட்டாளர்களை நம்ப வைத்தால், அவர்கள் தரும் பணத்தை பழைய முதலீட்டாளர்களுக்கு கொடுக்கலாம். புதிய முதலீட்டாளர்கள் வந்து கொன்டே இருக்கையில் நீங்கள் மீண்டும் மீண்டும் பணத்தை சுழற்சி செய்யலாம்.

எவ்வாறு கண்டறியலாம்?
  • அதிக முதலீட்டு வருமானம் – ஒவ்வொரு முதலீடும் ஓரளவு அபாயத்தைக் கொண்டுள்ளது. அதிக வருமானம் தரும் முதலீடுகள் பொதுவாக அதிக ஆபத்தை உள்ளடக்கியது. எந்தவொரு “உத்தரவாத” முதலீட்டு வாய்ப்பும் சந்தேகத்திற்குரியதாக கருதப்பட வேண்டும்.
  • அதிக சீரான வருமானம் – முதலீட்டு மதிப்புகள் காலப்போக்கில் ஏறி இறங்கும், குறிப்பாக அதிக வருமானம் தரக்கூடியவை. ஒட்டுமொத்த சந்தை நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் வழக்கமான வருமானத்தைத் தரும் பட்சத்தில் அந்த முதலீடு சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படுகிறது.
  • பதிவு செய்யப்படாத முதலீடுகள் – பொன்சி திட்டங்களில் பொதுவாக நிதி கட்டுப்பாட்டாளர்களிடம் (SEBI) பதிவு செய்யப்படாத முதலீடுகள் அடங்கும். நிறுவனத்தின் மேலாண்மை, தயாரிப்புகள், சேவைகள் மற்றும் நிதி பற்றிய முக்கிய தகவல்களை முதலீட்டாளர்களுக்கு தெரியப்படுத்த பதிவு செய்வது கட்டாயமாகும்.
  • இரகசிய அல்லது சிக்கலான உத்திகள் – புரிந்து கொள்ள முடியாத அல்லது முழுமையான தகவல்களைக் கண்டுபிடிக்க முடியாத அல்லது பெற முடியாத முதலீடுகள் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படுகின்றன.
  • பணம் பெறுவதில் சிரமம் – முதலீட்டாளர்கள் திரும்ப பணம் பெறுவதில் சிக்கல்கள் இருந்தால் அத்தகைய முதலீட்டையும் சந்தேகிக்க வேண்டும்.

இவ்வகை திட்டங்களை நீங்கள் நம்மூரிலும் கேள்விபட்டிருக்கலாம். தேக்கு மரம் வளர்ப்பு, ஈமு கோழி வளர்ப்பு என்று வெவ்வேறு பெயர்களில் இன்றும் நம்மிடையே பொன்ஸி திட்டங்கள் மாறுவேடத்தில் சுற்றுகின்றன.

அதிக லாபம் தரும் திட்டங்கள் என்றும் அதிக ஆபத்தானவையே.

You may also like...