சதுரங்க வேட்டை – பிரமிட் திட்டங்கள்

pyramid scheme
பிரமிட் திட்டம் என்றால் என்ன?

உண்மையான தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்காமல் மற்றவர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கும் ஒரு திட்டமாகும். புதிய உறுப்பினர்கள் முன்பணம் செலுத்தி திட்டத்தில் சேர்க்கிறார்கள். அவர்களிடமிருந்து பெறப்பட்ட பணம் ஆரம்பகால உறுப்பினர்களுக்கு பணம் செலுத்தப் பயன்படுகிறது. புதிய உறுப்பினர்கள் அதிக நபர்களைச் சேர்த்தால் அவர்களுக்கு அதிக வருமானம் வழங்கப்படும்.

எவ்வாறு செயல்படுகிறது?

அதன் பெயரில் குறிப்பிடுவது போல, இந்த திட்டம் ஒரு பிரமிட்டின் கட்டமைப்பை கொண்டிருக்கும்.
இது ஒரு தனி நபருடன் தொடங்குகிறது – திட்டத்தை ஆரம்பிப்பவர் முதல் நிலை – இவர் பிரமிட்டின் உச்சத்தில் இருக்கிறார். இத்திட்டத்தை இயக்க சில நபர்களை இரண்டாம் நிலையில் நியமிக்கிறார், அந்த நபர்கள் புதிய உறுப்பினர்களை கொண்டு வர வேண்டும். அந்த உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். உறுப்பினர்கள் செலுத்திய முன்பணம் அவரை சேர்த்து விட்டவருக்கும் அந்த பிரமிட்டின் மேல்நிலையில் இருப்பவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும். நீங்கள் நிறைய உறுப்பினரை சேர்த்தால் உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும். பிரமிட்டின் முதல் நிலையில் இருப்பவர் நிறைய சம்பாதிப்பர். அடுத்த அடுத்த நிலையில் வருமானம் குறையும். கடைசி சில நிலைகளில் இருப்பவர்கள் தன் மொத்த முதலீட்டையும் இழப்பார்கள்.
நீங்கள் சேரும் பொது பிரமிட்டின் எந்த நிலையில் உள்ளீர்கள் என்று அறிந்துகொள்ள முடியாது. அதுபோக இத்திட்டம் புதிதாக வாடிக்கையாளர்கள் சேர்ந்து கொண்டிருந்தால் மட்டுமே இயங்கும். அது தடை படும் பட்சத்தில் மொத்த பிரமிட் உம் தரைமட்டமாகும்.

உண்மையில், இந்தத் திட்டம் எந்தவொரு வணிகத்தையோ, முதலீட்டையோ உருவாக்கவில்லை. புதிய உறுப்பினர்களின் பணத்தில் மட்டுமே இயங்குகிறது.

பிரமிட் திட்டத்தின் மற்றொரு வடிவம்

பல நிலை சந்தைப்படுத்தல் (MLM)
மற்ற வகையான பிரமிடு திட்டங்களைப் போலில்லாமல், மல்டி-லெவல் மார்க்கெட்டிங் (எம்.எல்.எம்) உண்மையில் ஒரு சட்டத்திற்குட்பட்ட வணிகமாகும். ஒரு பொருளை அல்லது சேவையை விற்பதற்கு உறுப்பினர்களைச் சேர்ப்பதில் தொடங்கும். ஆட்சேர்ப்பு செய்பவர் பொருளை விற்கும்போது லாபத்தைப் பெறுகிறார். அதிகமான நபர்களை சேர்க்க வேண்டிய அவசியமில்லை – நீங்கள் நிறைய பொருட்களை விற்றால் போதும்.
பிரமிடு திட்டத்துடன் ஒப்பிடுகையில் MLM ஒரு பொருளை அல்லது சேவையை வழங்குகிறது.

ஆனாலும் கூட, MLM மோசடியுடன் தொடர்புபடுத்தப்படுவதற்கான காரணம் – அது விற்கும் பொருள் அல்லது சேவை. அமேசான் காட்டில் அல்லது இமய மலையில் இருந்து கொண்டு வந்த அரிய மூலிகைகள் – உங்கள் இளமையாய் வைத்திருக்கும், உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்று கொடுக்கப்படும் பொய்யான வாக்குறுதிகள்.

எவ்வாறு அடையாளம் காண்பது?

சில பொதுவான குணாதிசயங்கள் மூலம் இவ்வகை திட்டங்களை அடையாளம் காணலாம்.

 • ஆட்சேர்ப்புக்கு முக்கியத்துவம்
  ஒரு தயாரிப்பு அல்லது சேவையை விற்பதற்கு மாறாக – மற்றவர்களை சேர வைப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் திட்டம் இருந்தால் – சந்தேகத்தோடு அணுகுங்கள்
 • சேவைகளின் தரம்
  அவர்கள் தரும் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் தரம் குறித்து விசாரியுங்கள். மோசடி செய்பவர்கள் பொய்யான தயாரிப்புகளை உருவாக்கி மக்களை எளிதாக ஏமாற்றுகிறார்கள்.
 • குறுகிய காலத்திற்குள் அதிக வருமானம்
  மிகக் குறுகிய காலத்திற்குள் விரைவாகப் பணம் சம்பாதிப்பதற்கான வழியை ஒருவர் வழங்கினால், அத்தகைய திட்டங்கள் ஆபத்தானவையே.
 • வருவாய்க்கான ஆதாரம் இல்லை
  எந்தவொரு திட்டத்திலும் சேருவதற்கு முன், ஒருவர் வருவாய்க்கான ஆதாரத்தைக் கேட்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஆடிட்டர்கள் மூலம் தணிக்கை செய்யப்பட வேண்டிய நிதிநிலை அறிக்கைகளை கேட்கலாம். நிறுவனம் எந்த வகையான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது என்பதை அந்த அறிக்கைகள் காட்டும்.

எந்தவொரு திட்டமும் தான் தயாரித்த நம்பகமான தயாரிப்புகளில் லாபம் சம்பாதிக்க வேண்டுமே தவிர புதிய ஆட்களை சேர்ப்பதின் மூலம் லாபம் ஈட்டக்கூடாது. இவ்வகை திட்டங்கள் எத்தகைய வருமானம் தந்தாலும் அவற்றிலிருந்து ஒதுங்கியே இருங்கள்.

You may also like...