தங்க முதலீட்டு பத்திரம் (SGB)

sgb

தங்க முதலீட்டு பத்திரம் (Sovereign Gold Bond) – தங்கத்தில் முதலீடு செய்வதற்கான டிஜிட்டல் வழியாகும். இந்திய அரசின் சார்பாக ஆர்பிஐ சீரான இடைவெளியில் தங்கப் பத்திரத்தை வெளியிடுகிறது. ஒவ்வொரு பத்திரமும் 999 தூய்மையான ஒரு கிராம் தங்கத்தைக் குறிக்கிறது.

அரசாங்கம் ஏன் தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது?

உலக தங்க கவுன்சில் அறிக்கையின்படி, இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 800 டன்களுக்கும் அதிகமான தங்கத்தை இறக்குமதி செய்கிறது, நமது தங்கத் தேவையில் 90% இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. அதிக இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் தங்கம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தங்கம் அத்தியாவசிய தேவைக்கான பொருள் இல்லையென்பதால் அதனை இறக்குமதி செய்வது வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை தடைசெய்கிறது.
இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, தங்க பத்திரங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தங்கத்தை முதலீட்டிற்காக வாங்கும் பட்சத்தில் நீங்கள் அதனை தங்கப் பாத்திரங்களாக வாங்கலாம்.

தங்கப் பத்திரத்தின் நன்மைகள்

சேமிப்பு அபாயங்கள் மற்றும் செலவுகள் இல்லை: நீங்கள் தங்க நகைகளை வாங்கினால், அதன் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவீர்கள். வங்கி லாக்கரில் வைப்பதற்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும். தங்க பாத்திரத்தில் முதலீடு செய்தால் லாக்கர் மற்றும் இதர செலவுகள் இல்லை.
குறைந்த ஆபத்து: ரிசர்வ் வங்கி இந்த பத்திரங்களை மத்திய அரசாங்கத்தின் சார்பாக வெளியிடுகிறது. மத்திய அரசு இந்த திட்டத்தை ஆதரிப்பதால் உங்கள் முதலீடு பத்திரமாக இருக்கும்.
சந்தை விலையில் பணம்: உங்கள் பத்திரத்தை நீங்கள் ஒப்படைக்கும்போது, ​​ அன்றைய தங்கத்தின் சந்தை விலை என்னவோ அது உங்களுக்கு கொடுக்கப்படும். உதாரணமாக, 2020 ஆம் ஆண்டு 1 கிராம் தங்கத்தை 4000 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள். 2028 ஆம் ஆண்டு 1 கிராம் தங்கத்தின் விலை 8000 ரூபாய் என்றால். பத்திரத்தை திரும்ப ஒப்படைக்கும்போது, உங்களுக்கு 8000 ரூபாய் கிடைக்கும்.
செய்கூலி சேதாரம் இல்லை: நீங்கள் தங்க நகைகளை வாங்கும் போது, நகையின் தன்மைக்கேற்ப 5 முதல் 25 சதவீதம் வரை சேதாரம் இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் நகை வாங்குகிறீர்கள், சேதாரம் 20% என்று வைத்துக்கொண்டால். நீங்கள் வாங்கும்போதே தங்கத்தின் மதிப்பில் 20,000 ரூபாய் இழக்கிறீர்கள். SGB யில் செய்கூலி, சேதாரம் கிடையாது.
மூலதன ஆதாய வரி இல்லை: நீங்கள் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்தால், தங்கம் வாங்குவதற்கான மூலதன ஆதாயத்தின் மீதான வரியில் இருந்து நம் அரசு விலக்கு அளித்துள்ளது. இருப்பினும் ஈட்டப்படும் வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படும்.

தங்கப் பத்திரத்தின் அம்சங்கள்

மதிப்பு: SGB பத்திரங்களை கிராம் அல்லது கிலோகிராம் கணக்கில் மட்டுமே வாங்க முடியும். இந்தத் திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்க வேண்டும். ஒருவர் அதிகபட்சமாக 4 கிலோ மதிப்புள்ள தங்கத்தை மட்டுமே வாங்க முடியும். இதுவே அறக்கட்டளை என்றால் 20 கிலோ வாங்கலாம்.
வட்டி விகிதம்: உங்கள் முதலீட்டின் தொகைக்கு ஆண்டுதோறும் இரண்டு முறை உங்களுக்கு வட்டி வழங்கப்படும். RBI இந்த வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும். தற்போதைய வட்டி விகிதம் 2.5%. 10 கிராம் தங்கத்தை 40,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளீர்கள் என்றால். வட்டியாக 2.5% அதாவது ஆண்டுக்கு 1,000 ரூபாய் கிடைக்கும்.
தகுதி: இந்திய குடிமக்கள் மற்றும் இந்து ஒருங்கிணைந்த குடும்பங்கள் இந்த பத்திரங்களை வாங்கலாம்.
முதிர்வு: பொதுவாக, இந்தப் பத்திரம் எட்டு வருடங்களில் முதிர்ச்சியடையும். ஐந்து ஆண்டுகள் முடிவில் நீங்கள் விரும்பும் பட்சத்தில் பத்திரத்தை ஒப்படைத்து பணத்தை பெறலாம்.
8 ஆண்டுகள் முடிவில் தங்கப் பத்திரங்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் தானாக உங்கள் வங்கி கணக்கில் ரொக்கமாக வரவு வைக்கப்படும்.

நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டால், தங்கப் பத்திரத் திட்டம் – பாதுகாப்பானது, தொந்தரவு இல்லாதது மற்றும் உங்களுக்கு அதிக நன்மைகளை வழங்குகிறது.
உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்கு முதலீடு செய்ய திட்டமிட்டால், SGB ஒரு சிறந்த பாதுகாப்பான திட்டமாக இருக்கும்.

எங்கு வாங்கலாம்?

அணைத்து வங்கிகள், நியமிக்கப்பட்ட தபால் நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள் (NSE ,BSE) மற்றும் இறுதியாக, Stock Holding Corporation இந்தியா லிமிடெட் (SHCIL).

ஆன்லைனில் வாங்கும்போது, வங்கிகள் பெரும்பாலும் கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி அளிக்கின்றன.

You may also like...