NFT – எளிய விளக்கம்

Non-Fungible Token என்பதன் சுருக்கமே NFT, Fungible என்பது ஒரு சொத்தை அல்லது பொருளை அதே வகையான சொத்துக்களுடன் பரிமாறிக்கொள்ளும் திறன் ஆகும். உதாரணமாக 100 ரூபாய் நோட்டுக்கு பதிலாக இன்னொரு 100 ரூபாய் நோட்டை மாற்றலாம். ஆனால் அதே 100 ரூபாய் நோட்டு அப்துல் கலாம் கையெழுத்திடிருந்தால் அதன் மதிப்பே வேறு. அதனை இன்னொரு 100 ரூபாய் நோட்டுடன் மாற்றமாட்டீர்கள – அதுவே Non-Fungible.

தங்கத்தை நீங்கள் தரத்தின் அடிப்படையில் அதே அளவுள்ள தங்கத்துடன் மாற்றலாம் (fungible) ஆனால் வைரங்கள் – அவை வெவ்வேறு வண்ணங்கள், அளவுகள், செதுக்கல்கள் மற்றும் தரங்களைக் கொண்டிருப்பதால், அவை ஒன்றுக்கொன்று மாற்றக்கூடியவை அல்ல, எனவே அவை non fungible

NFT எவ்வாறு வேலை செய்கிறது?

உதாரணத்திற்காக, உங்கள் பெயரில் ஒரு நிலம் இருக்கிறது. அந்த நிலம் உங்களுடையது என்பதற்கான ஆதாரம் – ‘நில பத்திரம்’. நில பத்திரத்தை உங்கள் ஊரில் உள்ள பத்திர பதிவு அலுவலகம் உங்களுக்கு
வழங்குகிறது. வேறொருவர் உங்களிடம் நிலம் வாங்கும் பட்சத்தில் உங்கள் பெயரில் தான் அந்த நிலம் இருக்கிறது என்பதை உறுதி செய்ய அவர் பத்திர பதிவு அலுவலகத்தை நாடுவார். பத்திர பதிவு அலுவலகங்கள் இங்கு நிலத்திற்கான உரிமையை வழங்குவதோடல்லாமல் நிலம் குறித்த அணைத்து தரவுகளையும் சேமிக்கின்றன.

NFT-க்கள் கிட்டத்தட்ட அதே வேலையை தான் செய்கின்றது. ஒரு பொருளின் உரிமையை உங்களுக்கு உறுதி செய்ய பாத்திரத்தை போன்ற டிஜிட்டல் சான்றிதழ்களை வழங்குகின்றன அதே சமயம் அந்த பொருள் குறித்த அணைத்து தரவுகளையும் சேமிக்கின்றன.
டிஜிட்டல் தரவின் உரிமையை உங்களுடையது என சான்றளிக்க அல்லது டிஜிட்டல் உலகில் உள்ள எதையும் உங்களுடையது என நிரூபிக்க NFTகள் பயன்படுத்தப்படுகின்றன. நகலில் இருந்து அசலை அடையாளம் காணவும், நீங்கள் NFT தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

பிளாக்செயினில் NFT தொழில்நுட்பம் வருவதற்கு முன்பு டிஜிட்டல் ‘சொத்தை’ அங்கீகரிப்பது சாத்தியமில்லை.
டிஜிட்டல் சான்றிதழாக NFT செயல்படுவதால், அதன் முந்தைய உரிமையாளர்கள் மற்றும் உருவாக்கியவரின் வரலாற்றை நீங்கள் அறியலாம். அதே வேளையில், அதன் சட்டபூர்வமான தன்மையையும் நீங்கள் எளிதாகச் சரிபார்க்கலாம். இதே முறையில், டிஜிட்டல் சொத்தின் நம்பகத்தன்மையை நீங்கள் சரிபார்த்து, NFTயை உருவாக்கிய டிஜிட்டல் கலைஞருக்கு பிரீமியமும் செலுத்தலாம்.

NFT-க்கள் பல்வேறு வடிவங்களில் உள்ளது. ஒரு படம், ஒரு பாடல், ஒரு திரைப்படம், ஒரு ட்வீட் அல்லது ஆன்லைனில் கிடைக்கும் எதுவாகவும் இருக்கலாம். பிளாக்செயினில், NFT கிரியேட்டர்கள் அத்தகைய ஆன்லைன் சொத்துக்களுக்கு ஒரு “டோக்கனை” உருவாக்குகின்றனர். இந்த டோக்கனில், டிஜிட்டல் சொத்தின் பெயர், சின்னம் மற்றும் NFTயின் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்தும் தனித்துவமான ஹாஷ் போன்ற தகவல்கள் இருக்கும். இந்த டோக்கனை பின்னர் நீங்கள் வர்த்தகம் செய்யலாம்.

NFT-க்கள் எவ்வாறு மதிப்பு பெறுகிறது?

NFT ஆனது டிஜிட்டல் சொத்துக்களுக்கு மட்டுமின்றி, உரிமைக்கான ஆதாரம் தேவைப்படும் எதற்கும் உருவாக்கலாம்.
உரிமை, அடையாளம் தவிர, NFT-க்களின் மேலும் சில பண்புகளும் கவனிக்கவேண்டியவை –

  • வர்த்தகம் செய்யலாம்
  • மோசடி செய்வது கடினம்,
  • குறைந்த பற்றாக்குறையால் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு
  • பிரிக்கமுடியாதவை – Bitcoin போன்று இதனை பிரித்து வர்த்தகம் செய்ய முடியாது.

NFT கிரியேட்டர்கள், NFT கை மாறும் போதெல்லாம் அவர்களுக்கு ராயல்டிகள் வழங்கப்படும் என்று குறிப்பிடலாம். உதாரணமாக ஒரு இசைக்கலைஞர் ஒரு NFT பாடலை இயற்றலாம், மேலும் ஒவ்வொரு முறை அந்த பாடல் வர்த்தகம் செய்யப்படும் பொது ​​அவருக்கு ராயல்டி வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால் அவருக்கு அந்த ராயல்டி தானாகவே வழங்கப்படும்.

இந்தியாவில் NFT

Beyond Life என்ற இணையத்தளம் ஏற்பாடு செய்த ஏலத்தில் மெகாஸ்டார் அமிதாப் பச்சனின் ‘மதுஷாலா’ NFT – அவர் கையெழுத்திட்ட போஸ்டர்கள் மற்றும் சேகரிப்புகள், சுமார் 7.18 கோடிக்கு ஏலம் போனதாக அறிவிக்கப்பட்டது.
கமல ஹாசனும் தன் திரைப்படங்களின் சுவரொட்டிகள், நினைவு சின்னங்கள் மற்றும் அவதாரங்கள் ஆகியவை ரசிகர்களுக்குக் NFT வடிவத்தில் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

You may also like...