பங்குச்சந்தை சரிந்தது! முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்

பங்குச்சந்தை சரிந்தது, முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் என்று அடிக்கடி செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம்.
வியாபாரத்தில் ஒருவரின் லாபம் மற்றொருவரின் நஷ்டம். இங்கு பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது அதனால் லாபம் அடைந்தது யார்? அல்லது நஷ்டம் அடைந்தது யார்?

முதலில், அடிப்படையான ஒன்றைப் புரிந்துகொள்வோம்.

‘விலை’ என்பது உண்மையில் ஒரு மதிப்பீடு தான். உண்மையில், ஒரு பொருளின் ‘விலை’ தேவையுள்ள அல்லது ஆர்வமுள்ள மக்களால் அது எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்பதைப் பொறுத்தது.

ஒரு பொருளின் விலை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை சில உதாரணங்களால் காணலாம்

1. பாலைவனத்தில் ஒரு பாட்டில் மினரல் வாட்டர்:

எங்கும் மணல், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாத பாலைவனத்தில், ஒரு பாட்டில் மினரல் வாட்டருக்கு எவ்வளவு விலை கொடுப்பீர்கள்? ரூ. 50? ரூ. 500? அல்லது ரூ. 5000!. இங்கு 5000 ரூபாய்க்கு ஒரு பாட்டில் தண்ணீர் விற்றாலும் வாங்கி அருந்த தயங்கமாட்டிர்கள். எனவே, இங்கு விலை ரூ. 5000

2. விமான நிலையத்தில் ஒரு பாட்டில் மினரல் வாட்டர்:

விமான நிலையத்தில், அனைத்தும் அதிக விலையில் விற்கப்படுகின்றன. ஒரு சாதாரண மினரல் வாட்டர் பாட்டிலை இங்கு 100 ரூபாய்க்கு விற்கப்படலாம். எனவே, இங்கு விலை ரூ.100.

3. அண்ணாச்சி கடையில் ஒரு பாட்டில் மினரல் வாட்டர்

உங்கள் தெருவில் உள்ள அண்ணாச்சி கடையில் அதே மினரல் வாட்டர் பாட்டிலை எளிதாக ரூ.20 க்கு வாங்கலாம். எனவே, இங்கு விலை ரூ. 20

4. ஆற்றின் அருகே ஒரு பாட்டில் மினரல் வாட்டர்:

நீங்கள் ஓர் இயற்கையான கிராமத்தில் தண்ணீர் பாட்டிலை விற்க முயற்சித்தால். யாரும் வாங்க முன்வரமாட்டார்கள் ஏனெனில் அங்கு ஆற்று தண்ணீர் நீங்கள் விற்க முயலும் மினரல் வாட்டரை விட சுத்தமாக கிடைக்கும் மற்றும் இலவசமும் கூட. எனவே, இங்கு விலை ரூ.0.

இந்த நான்கு உதாரணங்களிலும், ஒரே பொருளின் விலை, காரணிகள் மற்றும் சூழ்நிலைகளை பொறுத்து மாறுபடுவதை காணலாம்.

ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் தண்ணீர் மாறவில்லை, “அதே பாட்டில் அதே தண்ணீர்” – 5000 ரூபாய்க்கு ஓரிடத்தில் விற்ற தண்ணீர் இன்னோரு இடத்தில் இலவசமாகவும் கிடைத்தது.

5000 ரூபாய்க்கு விற்ற தண்ணீர் இலவசமாக கிடைப்பதால், யாருக்கு நஷ்டம்? அல்லது யாருக்கு லாபம்?

எனவே சுற்றியுள்ள காரணிகளால் பொருளின் விலை மாறுவதை காணலாம். விலை ஏற்ற இறக்கம் என்பது ஒரு கற்பனையான விஷயம் மட்டுமே, ஏனெனில் அடிப்படைப் பொருள் ஒன்றுதான் ஆனால் காரணிகள் தான் வேறு.

விலை ஏற்ற இறக்கங்கள் கற்பனையெனினும், பொருளின் ‘தேவை’ மற்றும் ‘விநியோகம்’ போன்ற காரணிகளாலும் விலை மாறுபடலாம். ஒரே பொருளை மக்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு முறையில் மதிப்பிடுகிறார்கள். தக்காளி உற்பத்தி அதிகரித்த பொது கிலோ ரூ. 20 க்கும் அதுவே உற்பத்தி குறைந்தபோது கிலோ ரூ. 120 க்கும் விற்பது அதன் அடிப்படையில் தான். அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு விற்கும் வரை யாரும் நஷ்டம் அடைவதில்லை.

பங்குச் சந்தை சரிந்தாலும் இதுவே நடக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு யெஸ்(YES) வங்கியின் பங்குகள் ரூ.400க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. வங்கி குறித்த எதிர்மறை செய்திகள் பரவ பங்கு விலை 200 ரூபாய்க்கும் கீழே சென்றது இப்போது அதன் விலை ரூ.13. நீங்கள் 400 ரூபாய்க்கு அந்த பங்கை வாங்கி, 200 ரூபாய்க்கு விற்றால், உங்கள் நஷ்டம் 200 ரூபாயாக இருந்திருக்கும் அதுவே 20 ரூபாய்க்கு விற்றால் உங்கள் நஷ்டம் 380 ரூபாய். இங்கே கவனிக்கவேண்டியது “விற்றால்” என்பதை மட்டுமே. நீங்கள் விற்காதவரை யாரும் லாபமோ நட்டமோ அடையப்போவதில்லை.

விலை என்பது அந்த பொருளை குறித்த மதிப்பீடு மட்டுமே. யெஸ் வங்கியை ரூ.400க்கு மதிப்பிட்டவர்கள், சில நாட்களுக்குப் பிறகு 20 ரூபாய்க்கு மதிப்பிட்டனர். ஏனென்றால், யெஸ் வங்கியின் சூழ்நிலை மாறியிருந்தது, பாலைவனத்திலிருந்து சூழ்நிலை அண்ணாச்சி கடையாக மாறியபோது மக்களும் அந்த பொருளின் மீதான மதிப்பை குறைத்தனர்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் பங்குகள் மீதான மக்களின் மதிப்பீட்டை பொறுத்து பங்குகளின் விலை மாறுகிறது.

பங்குச்சந்தை சரிவின் பொது பல கோடி ரூபாய் நஷ்டமென்று கூறப்பட்டாலும். அதிக விலையில் பங்குகளை வாங்கி குறைந்த விலையில் விற்காதவரை – யாரும் இங்கே நஷ்டமடைவதில்லை.
இங்கே சந்தையின் மொத்த மதிப்பு மட்டுமே சரிகிறது. சில தினங்களில் சந்தை, மீண்டும் சரிவிலிருந்து மேலேறலாம்.

You may also like...