செல்வமகள் சேமிப்பு திட்டம்

செல்வமகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ரித்தி யோஜனா) என்பது பெண் குழந்தைகளுக்கு மட்டுமே ஆன ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும். பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு இத்திட்டத்தை 2014 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
சிறு சேமிப்புத் திட்டங்களிலேயே செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் தான் அதிக வட்டி கிடைக்கிறது. 2022 ஆம் ஆண்டு தரவுகளின் படி வட்டி விகிதம் 7.6 சதவீதமாக உள்ளது. பெண்ணின் 21 வயதில் கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைப்பதால் பொதுமக்களிடையே இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் பெண் குழந்தைகளுக்காக இத்திட்டத்தை தொடங்கலாம். பெண்ணுக்கு 24 வயது ஆகும் போதோ அல்லது திருமணத்தின் போதோ கணக்கிலுள்ள மொத்தத் தொகையை எடுத்துவிட்டு கணக்கை மூடி விடலாம்.

கணக்கைத் தொடங்க – தேவையான தகுதி
 • பெண் குழந்தையின் வயது 10 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
 • இந்தியாவில் வசிக்கும் குடிமகளாக இருக்க வேண்டும்
 • ஒரே குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மேல் கணக்கு தொடங்க முடியாது.
கணக்கைத் தொடங்க – தேவையான ஆவணங்கள்
 • அடையாளச் சான்று
 • பெண் குழந்தை மற்றும் பெற்றோர்/பாதுகாவலர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள்
 • பிறப்பு சான்றிதழ்
 • முகவரி சான்று

இதற்கு ஆதார் அட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தை எங்கு தொடங்கலாம்?

பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இச்செவையை வழங்குகின்றன இதனை தவிர தபால் நிலையங்களிலும் SSY கணக்கைத் தொடங்கலாம்.

தபால் நிலையங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை எவ்வாறு திறப்பது
இந்தியா போஸ்ட் இணையதளத்தின்படி, ஒருவர் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை எவ்வாறு தொடங்கலாம் என்பதை கீழே காணலாம்.

 1. தபால் நிலையத்துக்கு செல்லுங்கள்.
 2. தபால் அலுவலக கணக்கு திறப்பு படிவத்தை பூர்த்தி செய்யவும்.
 3. முகவரி போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பதாரரின் புகைப்படத்தை ஒட்டவும்
 4. ஆரம்ப வைப்புக்கான விவரங்களை உள்ளிடவும்
 5. நியமன விவரங்களை உள்ளிடவும்

பின் தபால் நிலையத்தில் உங்கள் படிவத்தை சமர்ப்பித்தால் உங்கள் கணக்கு தொடங்கப்படும்.

வரி சலுகைகள்

சுகன்யா சம்ரித்தி யோஜனா முதலீடுகள் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை விலக்குகளுக்குத் தகுதியுடையவை. கூடுதலாக, ஈட்டிய வட்டி மற்றும் இந்தத் திட்டத்தின் முதிர்ச்சியின் போது பெறப்படும் தொகைக்கும் வரி விதிக்கப்படுவது இல்லை.

எவ்வளவு முதலீடு செய்யலாம்?

செல்வ மகள் சேமிப்புக் கணக்கு தொடங்கும் போது முதல் கட்டமாக ரூ.250 செலுத்தினால் போதுமானது. வருடந்தோறும் குறைந்தபட்சம் 1000 ரூபாய் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை செலுத்தலாம். கணக்கு தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் டெபாசிட் செய்ய முடியும். தொடர்ச்சியாக டெபாசிட் செய்யாமல் இடைவெளி விட்டால் கணக்கு மூடப்பட்டுவிடும். பிறகு டெபாசிட் தொகையுடன் ஆண்டுக்கு ரூ.50 அபராதம் செலுத்தி கணக்கை புதுப்பித்து கொள்ளலாம்.

முன் கூட்டியே பணம் திரும்ப பெறலாமா?

பெண் குழந்தை 18 வயதை அடைந்த பிறகு முன் கூட்டியே உங்கள் முதலீட்டில் 50 சதவீதத்தை திரும்ப பெற முடியும். அதுவும் பெண் குழந்தையின் கல்விச் செலவினங்கள் அல்லது திருமணம் போன்ற காரணங்களுக்கு மட்டுமே தரப்படும்.
ஒரு வேளை உங்களது சுகன்யா சம்ரிதி கணக்கினை இடையில் தொடராவிட்டால், 15 வருடங்கள் கழித்து வட்டியுடன் திரும்ப பெற முடியும்.

You may also like...