நான் பணத்தை காதலிக்கிறேன்

money-heart

நான் பணத்தை காதலிக்கிறேன், இதனை சொல்வதில் கூச்சம் ஒன்றுமில்லை. பணம் நான் விரும்பும் வாழ்க்கையை வாழ அனுமதிக்கிறது, என் குடும்பத்திற்கு நல்ல உணவளிக்கவும், அழகான வீட்டில் வாழவும், விடுமுறையில் செல்லவும், இங்கே உட்கார்ந்து இந்த கட்டுரையை எழுதவும் அனுமதிக்கிறது. ஆகையால் பணத்தை காதலிப்பது ஒன்றும் தவறில்லை.

இந்த காதலில் சாதி பிரச்சனைகள் இல்லை. காதலிப்பதால் யாரும் ஆணவக் கொலைகளும் செய்யப்போவதில்லை. இங்கு அனைவரும் ஒரே சாதி தான் – பணக்கார சாதி.

நான் ஒன்றும் கோடீஸ்வரன் இல்லை (என்றாவது ஒரு நாள் ஆவேன் என்று நம்புகிறேன்), எனது தந்தையும் பெரிய பணக்காரர் இல்லை, பரம்பரை சொத்துக்களும் இல்லை. வேலையில் அதிக சம்பளம் ஒன்றும் பெறவில்லை. வாழ்க்கையில் எதுவும் எளிதில் கிடைத்து விடவும் இல்லை.

ஆனால் பணத்தின் மேல் காதல் உள்ளது, பணத்தின் மேல் உள்ள புரிதலால் அது என் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அறிவேன். ஆகையால் பணத்தை மேற்கொண்டு காதலிக்கிறேன்.

பணம் ஒரு சிறந்த காதலி. நீங்கள் விருப்பப்படும் எல்லாவற்றையும் வாங்கி வரும்.

நீங்களும் பணத்தை காதலியுங்கள்

நம் சிறுவயதில் இருந்தே பணம் ஒரு மோசமான விஷயம், பணம் துன்பத்தை தரும் என்றே வளர்க்கப்பட்டிருக்கிறோம். நாம் கண்ட பெரும்பாலான திரைப்படங்களில் வில்லன் பணக்காரனாக இருப்பான். இதுவே பணத்தை பற்றி ஓர் எதிர்மறை விஷயத்தை மனதில் விதைத்தது.

பணம் நம்மை மோசமானவனாக மாற்றும் என்று நம்ப வைக்கப்படுகிறோம். பெரும்பலான மத போதனைகளும் அதனை சுற்றியே உள்ளன. ஆழ்மனதில் பணத்தை நேசிப்பதற்கு பதில் அதனை வெறுக்க ஆரம்பிக்கிறோம். உங்கள் வாழ்க்கையில் வெறுப்பான ஒன்றை வைத்திருக்க விரும்புவீர்களா? நீங்கள் வெறுக்கும் ஒன்றை பெரிய அளவில் சேமித்தும் வைக்க மாட்டீர்கள் அல்லவா.

எனவே நாம் அதை செலவழிக்கிறோம், பறிகொடுக்கிறோம், ஏமாறுகிறோம். அதிகம் சம்பாதிப்பதைத் தவிர்க்கிறோம் – ஏனென்றால் பணம் நிம்மதியை தராது என்று உறுதியாய் நம்புகிறோம்.

இது ஒரு மனநிலை, இதை மாற்றுவது மிகவும் கடினம். பணக்காரர்கள் ஒருபோதும் பணத்தை வெறுப்பதில்லை.

பணம் கெட்டது இல்லை
பணம் இல்லாமையே கெட்டது

பணத்தை காதலிப்பதற்கான சில காரணங்கள்
  1. பணம் மன அமைதியை தரும் – கடன்கள் அல்லது உங்களின் வேலையை பற்றி தினமும் கவலை கொள்கிறீர்களா? உங்களுக்கு வேலை இல்லையென்றாலும் ஓரிரு வருடங்கள் கவலைப்படாத அளவுக்கு வங்கியில் பணம் வைத்திருந்தால் – நீங்கள் எந்த கவலையுமின்றி தூங்கலாம்.
  2. பணம் வசதி தரும் -. நீங்கள் ஒரு சிறிய நெரிசலான குடியிருப்பில் இரண்டு குழந்தைகள் மற்றும் தாய் தந்தையுடன் எந்த வசதியுமின்றி வசிக்கிறீர்களா? பாதுகாப்பான சுற்றுப்புறத்தில் வசதியான, அமைதியான வீட்டை வாங்க பணம் உங்களை அனுமதிக்கும்.
  3. பணம் எதிர்காலத்தை தரும் – எதிர்காலத்தில் வேலை செய்யாமல் நன்றாக வாழ விரும்புகிறீர்களா? ஆம் எனில், முதலாளி இல்லாத எதிர்காலத்திற்காகவும், வேலை செய்யாமல் வருமானம் ஈட்டவும் பணம் உங்களை அனுமதிக்கும்.
  4. பணம் தன்னம்பிக்கை தரும் – நீங்கள் உங்கள் முதலாளியை சகித்துக்கொண்டு விரும்பாத ஒரு வேலையில் முதலாளிக்காக வேலை செய்கிறீர்களா? உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால், மோசமான சூழ்நிலையிலிருந்து விலகி புதிதாகத் தொழில் தொடங்க பணம் உங்களுக்கு தைரியத்தைத் தரும்.
  5. பணம் உதவி செய்யும் – நீங்கள் வசதியில்லாத சகோதரி அல்லது சகோதரருக்கு உதவ விரும்புகிறீர்களா அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்க விரும்புகிறீர்களா? பணம் உங்களுக்கு அதிக தொண்டு செய்ய உதவும்.
  6. பணம் நேரத்தை வாங்கும் – உடற்பயிற்சி, வாசிப்பு, சமைக்கக் கற்றுக்கொள்வது, பயணம் செய்தல், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது போன்றவற்றில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? வாழ்க்கையில் சரியான நிதி திட்டமிடலை மேற்கொள்வதன் மூலம் முன்கூட்டியே ஓய்வு பெறுவது, மேற்கூறியவற்றைச் செய்வதற்கான நேரத்தை உங்களுக்குக் கொடுக்கும்.
  7. பணம் நல்ல உணவை தரும் – உங்களுக்கு பைவ் ஸ்டார் ஹோட்டலில் பஃபே சாப்பிட வேண்டும் என்று ஆசையா? பணம் உலகின் சிறந்த உணவை வாங்க உதவும்.
  8. பணம் அனுபவங்களை தரும் – விமானக் கட்டணங்கள் மற்றும் ஹோட்டல் விலைகளைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதால் நீங்கள் பயணம் செய்யவில்லையா? பணம் உங்கள் பயணங்களை விரிவுபடுத்தும், நீங்கள் உலகின் எந்த மூலைக்கும் சென்று வர உதவும்.
பணத்தை காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்

பணத்தை காதலியுங்கள் – நீங்கள் வெறுக்கும் ஒரு நபர் உங்களிடம் வருவதற்கு விருப்பப்படுவாரா? அது போல் தான் பணமும். நீங்கள் வெறுத்தால் பணம் உங்களிடம் இருந்து விலகி செல்லும். நேசித்தல் விரும்பி வரும்

You may also like...