சதுரங்க வேட்டை – நைஜீரிய மோசடி
ஒரு “நைஜீரிய இளவரசரிடமிருந்து” ஒரு மின்னஞ்சல், அவருடைய தந்தை இறந்துவிட்டார் அந்த சொத்தை பெறுவதற்கு முன்பணம் வழங்க வேண்டும். அதை நீங்கள் கொடுக்கும் பட்சத்தில் அவர் தனது பரம்பரை சொத்தை பெறும்போது, அதில் ஒரு பெரிய பகுதியை உங்களுக்கு வழங்குவார்.
இதுபோன்றதொரு மின்னஞ்சலை நீங்களும் பெற்றிருக்கலாம். உண்மையில் நீங்கள் பணத்தை அனுப்பினால், அதற்குப் பிறகு உங்களுக்கு நன்றி சொல்லி மேலும் பணம் கேட்டு மின்னஞ்சல் மட்டுமே வரும். உங்கள் பணம் கோவிந்தா தான்.
எவ்வாறு செயல்படுகிறது?
நைஜீரியா, ஐவரி கோஸ்ட் அல்லது வேறு ஏதேனும் வெளிநாட்டிலிருந்து உங்கள் மின்னஞ்சல் முகவரிகளுக்கு இந்த ஈமெயில் அனுப்பப்படுகின்றன. அந்த அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு (வங்கி, அரசு நிறுவனம் அல்லது சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்) பிரச்சனைகள் அல்லது சட்டச் சிக்கலில் இருந்து மீள உதவி செய்யுமாறு கடிதத்தின் சாராம்சம் இருக்கும் . நீங்கள் உதவி செய்யும் பட்சத்தில் பல மில்லியன் டாலர் தொகை உங்களுக்கு கிடைக்கும் எனவும் உறுதியளிக்கப்படும்.
நீங்கள் இப்போதும் இதனை “மோசடி” என்று நம்பாமல் இதற்கு உதவ ஒப்புக்கொண்டால், அந்த பணத்தை அனுப்ப அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி, உங்களிடமிருந்து ஒரு சிறிய தொகையை செலுத்த சொல்லி மின்னஞ்சல் வரும். நீங்களும் பின்னல் வரும் பெரிய தொகையை மனதில் கொண்டு, அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து காத்திருக்கிறீர்கள்.
உங்களுக்குப் பணம் கிடைப்பது தாமதமடைகிறது. நீங்கள் எரிச்சலடையும் நேரத்தில்.
தாமதம் ஏன்! என்பதற்கான கூடுதல் காரணங்கள் மற்றும் மேலும் சில சிக்கல்களுக்கு உதவ இன்னும் கொஞ்சம் பணம் தேவை என்று மின்னஞ்சல் வரும், நீங்கள் அனுப்பினால் எல்லாம் இந்தமுறை சரியாகிவிடும் என்ற உறுதிமொழிகள் சேர்த்து வழங்கப்படும்.
நீங்கள் இப்போதும் பணத்தை அனுப்பினால் உங்களை விட ஏமாளி உலகில் இருக்கமுடியாது.
நீங்கள் அனுப்பிய பணத்தைப் பொறுத்தவரை, அது நிரந்தரமாக உங்களை விட்டு போய்விட்டது.
சுருக்கமாகச் சொல்வதானால், கற்பனை செய்ய முடியாத பணம் என்ற வாக்குறுதியால் உங்களுள் ஒளிந்திருக்கும் பேராசைக்காரனுக்கு வலைவிரிக்கிறார்கள். ஆசை கண்களை மறைந்தவுடன் பல பேர் விருப்பத்துடன் அவர்கள் கேட்ட தொகையை பகிர்ந்து கொள்கின்றனர்.
இதையெல்லாம் செய்து முடித்தால் நான் 2 கோடி ரூபாய் பெறுவேன் என்றால் 50,000 அல்லது 1,00,000 ரூபாய் செலவழிக்க பல பேர் தயங்குவதில்லை.
வெவ்வேறு வடிவங்கள்
- ஒரு செல்வந்த வெளிநாட்டவர் ஒரு தேவாலயம் அல்லது மத அமைப்புடன் தொடர்பு கொண்டு கணிசமான செல்வத்தை குறிப்பிட்ட அமைப்புக்கு விட்டுச் செல்வதைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை. அவர் பாவம் செய்ததாகவும் இப்போது திருந்தி நன்மை செய்ய முயற்சிப்பதாகவும் கூறலாம். ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவராக உங்களின் நற்செயல்களைப் பற்றி கேள்விப்பட்டதாகவும், அவற்றைத் தொடர உதவுவதற்காக தனது பணத்தை தர விரும்புவதாகவும் கூறலாம், ஆனால் இது உங்களுக்கு விரிக்கப்பட்ட ஒரு வலை.
- வெளிநாட்டு லாட்டரியில் ஒரு முக்கியமான பரிசை வென்றதாகத் தெரிவிக்கப்படும். அந்த பணத்தை வசூலிக்க முயலும் போது மட்டுமே, நீங்கள் அந்த வெற்றியைப் பெற சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்படும். இதுவும் உங்களுக்கு விரிக்கப்பட்ட ஒரு வலை
நைஜீரிய மோசடி என்று அழைக்கப்பட்டாலும் பல நாட்டு மக்கள் இந்த முறையீடுகளில் ஈடுபட்டுள்ளனர். ஆகையால் நைஜீரியர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் மட்டுமின்றி மற்ற நாடுகளில் இருந்து வரும் மின்னஞ்சலிலும் அதே எச்சரிக்கையை கையாளுங்கள்.
இந்த மோசடியின் பொதுவான ஒற்றுமையை புரிந்து கொள்ளுங்கள் – எங்காவது தொலைவில் உள்ள ஒருவர் உங்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் வழங்க விரும்புகிறார் ஆனால் பணத்தை அங்கிருந்து இங்கு கொண்டு வர உங்கள் உதவி தேவை. மில்லியன் கணக்கான பணம் உங்கள் ஆசையை தூண்டும். கண்களை மறைக்கும். சிறிய மீனை வைத்து பெரிய மீனை பிடிப்பதாய் நினைத்து இருக்கின்ற மீனையும் இழக்கும் அதே பழைய கதை தான்.
இத்தகைய மோசடியில் யாரேனும் விழுவர்களா என்று நீங்கள் ஆச்சரியப்படக்கூடும். ஆனால் உண்மையில் ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய் அளவிற்கு மக்கள் இதில் ஏமாறுகின்றனர்.
மோசடியின் வரலாறு
நைஜீரிய மோசடி ஒன்றும் புதிதல்ல! பல தசாப்தங்களாக உள்ளது. முதலில் கடிதங்கள் மூலமாகவும், பின்னர் தொலைநகல் மூலமாகவும், இப்போது மின்னஞ்சல் மூலமாகவும் நடத்தப்படுகிறது.
1920 களில் ‘ஸ்பானிய கைதி’ மோசடி என்று அறியப்பட்டது. ஸ்பெயினில் உள்ள சிறையிலிருந்து ஒரு பணக்கார குடும்பத்தின் வாரிசு என்று சொல்லி, தன் விடுதலைக்கு உதவுபவர்களுக்கு தன் சொத்தில் ஒரு பகுதியை அளிப்பதாகும் உறுதி அளித்தனர். அதனை நம்பி அப்போதும் பேராசையில் நிறைய பேர் பணம் இழந்தனர்.
நைஜீரியப் பெயர்களைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள மக்களிடமிருந்து மில்லியன் கணக்கான டாலர்களை மிரட்டி பணம் பறித்ததாக நைஜீரியாவின் மத்திய வங்கி தெரிவிக்கிறது.
இருப்பினும், மோசடி செய்தவர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குள் இல்லை என்பதால் பெருபாலான நாடுகளால் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.
எனவே வெளிநாட்டில் உள்ளவர்களிடமோ அல்லது வணிக நிறுவனங்களிடமோ பணம் பரிமாற்றம் செய்யும் போது நீங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.







Users Today : 55
Users Yesterday : 154
Total Users : 90941
Views Today : 70
Total views : 751971